அமித் ஷா, உமர் அப்துல்லா  
இந்தியா

ரூ.30 கோடி ரொக்கம்.. அமைச்சர் பதவி.. குதிரை பேரம் என குற்றம்சாட்டிய உமர் அப்துல்லா - ஆதாரம் கேட்கும் பாஜக

பேரத்தில் ஈடுபட்ட அந்த பாஜக தலைவர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் யார்?

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்ததாக முதல்வர் உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். பாஜக இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பேரம்

தங்கள் எம்எல்ஏக்களுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் பணமும் அமைச்சர் பதவியும் கொடுத்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட முயல்வதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் பகுதியில் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் உமர் அப்துல்லா ஆற்றிய உரையில்,

ஆரம்பத்தில் கட்சி எம்எல்ஏக்களுக்குப் பணமும் அமைச்சர் பதவியும் வழங்க முன்வந்தார்கள்.

அது பலிக்காததால், தற்போது ஒரு புதிய வலையை வீசியுள்ளனர்.

'எங்களுடன் வாருங்கள், ஜம்முகாஷ்மீருக்கு உடனடியாக முழு மாநில அந்தஸ்தை திருப்பித் தருகிறோம்' என்று எம்எல்ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசி வருகிறார்கள்.

ஜம்முவை சேர்ந்த நம் கட்சி எம்எல்ஏ ஒருவரே என்னிடம் நேரடியாக இதை கூறினார்.

பாஜகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு நபரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஒருவர், எம்எல்ஏவை அணுகியுள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியை விட்டு வெளியேறி ஆதரவு அளித்தால், ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை பணமும், அதோடு அமைச்சர் பதவியும், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பாஜகவின் இந்த மிரட்டல் மற்றும் ஆசைவார்த்தைகளுக்குத் நம் கட்சி எம்எல்ஏக்கள் ஒருபோதும் பணிய மாட்டார்கள்.

பின்வாசல் வழியாக நுழைந்து, முன்வாசலில் இருக்கும் நாற்காலியைப் பிடித்துவிடலாம் என்று பாஜக கனவு காண வேண்டாம். மக்கள் உங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளனர். அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும்" என்று கூறினார்.

பாஜக பதில்

உமர் அப்துல்லாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளரும் எம்எல்ஏவுமான ஆர்.எஸ். பதானியா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "பணம் மற்றும் பதவி ஆசை காட்டப்பட்ட அந்த தேசிய மாநாட்டுக் கட்சி எம்.எல்.ஏ-க்களின் பெயர்கள் யார்?, பேரத்தில் ஈடுபட்ட அந்த பாஜக தலைவர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் யார்?.

இந்த குதிரை பேர முயற்சிகள் எப்போது, எங்கு வைத்து நடத்தப்பட்டன? என்பதற்கு ஆதாரம் இருந்தால் வழங்க வேண்டும். இல்லையெனில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

உமர் அப்துல்லா தனது குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறவோ அல்லது நிரூபிக்கவோ தவறினால், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்" என்று எச்சரித்தார்.