அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது.
ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது. ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது.
மருத்துவர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக 'லாப்ரோஸ்கோபி' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன.
வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்.
அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர்.