இந்தியா

குஜராத் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

பில்கிஸ் பானு குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொலை செய்யப்பட்டதுடன், அவரின் மூன்று வயது மகளும் படுகொலை செய்யப்பட்டார்.

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இருவருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தின் போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு 11 நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தில் பில்கிஸ் பானு குடும்பத்தை சேர்ந்த 14 பேர் கொலை செய்யப்பட்டதுடன், அவரின் மூன்று வயது மகளும் படுகொலை செய்யப்பட்டார்.

சிபிஐ விசாரணை

இதையடுத்து இந்த வழக்கிற்கு குஜராத்தில் நியாயமான விசாரணை நடத்த சாத்தியமில்லை என்று கூறி, இதன் விசாரணையை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, மத்திய புலனாய்வு துறைக்கு இந்த வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு, குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை 2017 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நீதிமன்றம் உறுதி செய்தது.

குஜராத் அரசு விடுதலை

இதையடுத்து 2022 ஆகஸ்ட் 15 அன்று, 1992 ஆம் ஆண்டு கொள்கையின் கீழ், குற்றவாளிகள் 11 பேருக்கு தண்டனையை குறைத்து, அவர்களை விடுவித்து குஜராத் அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து 2024 ஜனவரி 8 அன்று, தண்டனை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பான குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை மகராஷ்டிராவில் நடத்தப்பட்டதால், தண்டனையை குறைக்க குஜராத் அரசாங்கத்திற்கு அதிகார வரம்பு இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து குற்றவாளிகள் 11 பேரையும் மீண்டும் சிறைக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து, பிபின்சந்த் ஜோஷி மற்றும் பிரதீப் மோதியா ஆகியோர் அக்டோபர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

மேலும் கைதாகி சிறையில் உள்ள பிபின்சந்த் ஜோஷி, தான் ஒரு மாற்றுத்திறனாளி என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து பில்கிஸ் பானோ வழக்கில் கைதாகி 17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் இருவருக்கும், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT