சர்க்கரை விலை உயர்வு- ஷ்ரவன் குமார்
இந்தியா

சர்க்கரை விலை உயர்வு: நீரிழிவு நோயை குறிப்பிட்டு விசித்திரமான பதில் அளித்த பீகார் அமைச்சர்

இந்தியாவில் பருவமழை பொய்த்த காரணத்தால் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் சர்க்கரை விலை அதிக அளவில் உயர்ந்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் ஷ்ரவன் குமார், இப்போதெல்லாம் யார் ஸ்வீட்ஸ் சாப்பிடுகிறார்கள்? சர்க்கரை விலை உயர்வால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்க்கரை விலை உயர்வு

இந்தியாவில் உற்பத்தி திறன் குறைவு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதால் சர்க்கரை விலை அதிகரித்துள்ளது. பீகாரில் சில்லறை விலையில் ஒரு கிலோ சர்க்கரை 48 ரூபாய் 50 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. தற்போது 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பீகார் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் அளித்த பதில் விசித்திரமாக இருந்தது.

இது தொடர்பாக பீகார் அமைச்சர் ஷ்ரவன் குமார் கூறியதாவது:-

எப்படியும் மக்கள் இப்போது குறைவான அளவிலேயே சர்க்கரையை உட்கொள்கிறார்கள். எல்லோரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதெல்லாம் யார் ஸ்வீட்ஸ் சாப்பிடுகிறார்கள்? சர்க்கரை விலை உயர்வால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றே நான் கருதுகிறேன். எனவே, இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.

இவ்வாறு ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அமைச்சர் விஜய் குமார் கூறியதாவது:-

சர்க்கரையின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை ஆராய வேண்டும். சர்க்கரை உற்பத்திக்கு என ஒரு அமைச்சர் உள்ளார். இது குறித்து நாங்கள் விவரங்களைக் கேட்போம். எனது விவசாயிகளின் விளைபொருட்களின் விலை உயரும்போது நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அமைச்சர் விஜய் குமார் தெரிவித்தார்.

அமைச்சர் ஷ்ரவன் குமார் கருத்துக்கு பப்பு யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பப்பு யாதவ் இதுகுறித்து கூறியதாவது:-

மாட்டுச் சாணத்தின் மீது எவ்வளவு நெய் ஊற்றினாலும், அது மாட்டுச் சாணத்தின் சுவையையே கொண்டிருக்கும். அத்தகைய அமைச்சரிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்? சமையல் எரிவாயு மற்றும் தக்காளி விலை உயர்ந்தபோது, ​​ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனால் இன்று சர்க்கரை விலை உயரும்போது, ​​அவர்கள் நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) பற்றி பேசுகிறார்கள். உண்மையில், அரசாங்கமே மிகப்பெரிய நீரிழிவு நோயாக உள்ளது.

இவ்வாறு பப்பு யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.