இந்தியா

போபால், அகமதாபாத், கொல்கத்தாவில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக இந்தியா கூட்டணி பேரணி!

SIR நடவடிக்கையை 'வாக்குத் திருட்டு' என விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடிக்கும் மேற்பட்ட பெயர்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, வரும் டிசம்பர் 12 அன்று போபாலிலும், டிசம்பர் 19 அன்று அகமதாபாத்திலும் அடுத்தடுத்த பேரணிகளை நடத்த இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெறும் பேரணி ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என்று மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று பேரணிகளும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாக்குத் திருட்டு

கடந்த நவம்பர் 1 அன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் 'வாக்கு காப்போம், நாடு காப்போம்' என்ற முழக்கத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடிப் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இடதுசாரித் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பிற தலைவர்கள் அப்பேரணியில் பங்கேற்றனர். சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை 'வாக்குத் திருட்டு' என விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடிக்கும் மேற்பட்ட பெயர்கள் தவறாக நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் மீது விமர்சனம்

சமூகத்தின் பலவீனமான பிரிவினரைச் சேர்ந்த தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடும் அபாயம் உள்ளதாகவும், இந்த நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் வாதிட்டுள்ளன. அரசியல் கட்சிகள் எழுப்பிய கவலைகளுக்குத் தேர்தல் ஆணையம் முறையாகப் பதிலளிக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், நவம்பர் 1 பேரணியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், இந்தத் திருத்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. அதேநேரம், துல்லியமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையே இது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT