பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் வாடிக்கையாளரின் பெயருக்குப் பதிலாக அவரது உடல் அமைப்பைக் குறிப்பிட்டு 'உருவக் கேலி' செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு கோரமங்களா பகுதியில் இயங்கி வரும் 'சுப்கோ தி கிராஃப்டரி' என்ற பிரபல காபி உணவகத்திற்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை முடித்துவிட்டு பில் வாங்கிப் பார்த்தபோது, அதில் வாடிக்கையாளரின் பெயரோ அல்லது மேஜை எண்ணோ குறிப்பிடப்படாமல், "கருப்புச் சட்டை அணிந்த சிறு குண்டான நபர்" என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த பில்லின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
வாடிக்கையாளரை மரியாதையுடன் நடத்தாமல், அவரது உடல் உருவத்தைக் கொண்டு அவமதித்தது இணையவாசிகளிடையே பலத்த கண்டனங்களை எழுப்பியது. பாலின பாகுபாடின்றி உருவக் கேலி செய்வது கண்டிக்கத்தக்கது என்றும், கணினி அமைப்பில் வேண்டுமென்றே ஊழியர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்றும் பயனர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, 'சுப்கோ' காபி நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. “எங்கள் உணவகத்தில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் தவறானது. உருவக் கேலியை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ள நிர்வாகம், இந்தச் செயலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க பில்லிங் முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.