

தொலைக்காட்சி சேனல்களில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட நேரம் விளம்பரம் ஒளிபரப்பப்படும் விதிகளை நீக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், ‘கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (திருத்தம்) விதிகள், 2026-ஐ திருத்தம் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், “1994-ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் விதிகளில், விதி 7-இல் உள்ள துணை விதி (11) நீக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த துணை விதி ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடங்கள் என தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு வரம்பு விதித்திருந்தது.
1994 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி வலையமைப்பு விதிகளின் கீழ், 2026 ஆம் ஆண்டில் விளம்பர கால வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், தொலைக்காட்சி ஒளிபரப்பு துறையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் அடைந்துள்ளதாக அமைக்ககம் தெரிவித்துள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செய்தி குறிப்பில், 2006-ஆம் ஆண்டில் 62 தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டுமே இருந்தன எனவும், ஆனால் தற்போது 900-க்கும் மேற்பட்ட அலைவரிசைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கேபிள் டிவி துறையின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை தொடர்ந்து, DTH, கேபிள் டிவி, HITS மற்றும் IPTV உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சி விநியோக தளங்களும், தற்போது 300 முதல் 500 க்கும் மேற்பட்ட அலைவரிசைகளை கொண்டுள்ளன.
இந்த வகையான தொலைக்காட்சி ஒளிபரப்பு துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து, விளம்பர கால அளவு தொடர்பான விதிமுறைகளை மறுபரீசிலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்தியாவில் ஒரு சேனல் கட்டண சேனலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அது பெருமளவில் விளம்பரங்களை சார்ந்துள்ளது.
தொலைக்காட்சி துறைக்கும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இடையே சந்தையில் போதுமான போட்டி நிலவுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கருதுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தையில் நியாயமான போட்டியை ஏற்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் விளம்பர கால வரம்பை நீக்கி மத்திய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.