கர்நாடக மாநிலம் பெங்களூரு புரூக்பீல்டில் உள்ள Capgemini நிறுவன வளாகத்திற்குள் 'லிட்டில் ஸ்காலர்ஸ்' என்ற குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வந்தது.
நிறுவனத்தில் பணிபுரிவோர் பலர் நாள் முழுவதும் தங்கள் குழந்தைகளை இங்கு விட்டுச் செல்வது வழக்கம்.
அண்மையில் இந்த மையத்தில் குழந்தைகள், பராமரிப்பாளர்களால் மிகவும் மோசமான முறையில் நடத்தப்படும் வீடியோக்கள் வைரலாகின.
சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு வீடியோவில், சிறுமி பாத்ரூமிற்குள் பூட்டப்பட்டு, கதவின் கீழ் இருக்கும் சிறிய இடைவெளி வழியாக "அம்மா, அம்மா" என்று அழுதுகொண்டே எட்டிப் பார்க்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இதன் அடிப்படையில், 55 வயதான பராமரிப்பாளர் விஜயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பராமரிப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மையத்தில் தங்கள் குழந்தையை சேர்த்த தம்பதியினர் போலீசாரிடம் கூறுகையில், "எங்களது ஒரே மகளை 8 மாதங்களுக்கு முன்பு இங்கு சேர்த்தோம்.
சேர்த்த ஒன்று இரண்டு மாதங்களிலேயே அவளுக்குப் பாத்ரூம் மற்றும் கழிவறைகளைக் கண்டால் பயமும், வெறுப்பும் ஏற்பட்டது.
குளிக்கவோ, கழிவறைக்கோ அழைத்துச் சென்றால் அலறிக்கொண்டு ஓடி வருவாள். இப்போது வீடியோவைப் பார்த்த பிறகுதான் புரிகிறது, அவள் அழுததற்காக அந்த மையத்தில் அவளைத் தொடர்ந்து பாத்ரூமிற்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளனர்.
மற்றொரு 3 வயது ஆண் குழந்தையின் பெற்றோர்கள் கூறுகையில், தங்களது குழந்தையிடம் பெரிய நடத்தை மாற்றம் தெரியவில்லை என்றாலும், அங்குள்ள பெண் பராமரிப்பாளர்கள் குழந்தைகளை கடுமையான குரலில் மிரட்டுவதை கேட்டு குழந்தைகள் பயந்து நடுங்குவதை கவனித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே குழந்தைகளை வாஷிங் மெஷினில் பூட்டியதாகவோ அல்லது டாய்லெட் குழாய் மூலம் வாயில் தண்ணீர் அடித்ததாகவோ கூறப்பட்ட புகார்களுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகக் கேப்கெமினி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குழந்தைகளின் பாதுகாப்பிற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
தற்போது அந்த டே-கேர் மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்" என்று தெரிவித்துள்ளது.