செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' (UFBU), வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் ஊதிய சீரமைப்பு உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிலாளர் நலத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற சமரசப் பேச்சுகளில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கு ஊழியர்கள் ஒப்புக்கொண்ட நிலைகளிலும், அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கும் 5 நாள் வங்கி வேலை கோரிக்கை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் சமமான ஊக்கத்தொகை வழங்கும் பழைய முறையை மாற்றி, உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிக ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பாகுபாடான புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. பயனாளிகளின் ஓய்வூதியத் தொகையை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்துவதுடன், தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
வங்கி சங்கங்களின் தொடர் எதிர்ப்பை அடுத்து, பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படவிருந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை அறிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து வரவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ள போதிலும், 5 நாள் வேலை உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளில் தெளிவான அறிவிப்பு வராததால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற போரட்டம் அழைப்பு விடுத்த அமைப்புகள் மறுத்துவிட்டன.
செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களால், பொதுத்துறை வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை மற்றும் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நேரடி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.