ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!

சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.
Chiranjeevi-Konidela Sushmita
Published on
Summary

பிரபல திரைப்பட நடிகரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான சிரஞ்சீவியின் மகளும் திரைப்பட தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதாவுக்கு ஆந்திரப் பிரதேச அரசு முக்கியமான புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி வர்லா தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஆந்திர மாநில தேவாலய மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் கே.கன்ன பாபு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம் தேவஸ்தானத்தின் மேம்பாட்டுப் பணிகளிலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும் சுஷ்மிதா முக்கியப் பங்கு வகிப்பார். மேலும், கோயில் அறங்காவலர் குழுவிற்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் தனது அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை வழங்குவார். தொடர்ந்து, நவராத்திரி மற்றும் முக்கிய திருவிழாக்கள், ஜாத்திரை காலங்களில் கோயிலின் நிர்வாக நடவடிக்கைகளுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கி உதவுவார்.

நன்றி தெரிவித்த சுஷ்மிதா

தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுஷ்மிதா, முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். கனக துர்க்கை அம்மனின் சேவையில் மிகுந்த பக்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்றுவேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.

சிரஞ்சீவி குடும்பத்தின் ஆதிக்கம்

சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திரைப்படத் துறை மட்டுமன்றி தெலுங்கு மாநிலங்களின் ஆன்மீக மற்றும் அரசியல் தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். மற்றொரு சகோதரர் நாகபாபு சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார்.

சிரஞ்சீவியின் மனைவி சுரேகா கொனிடெலா, சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள புகழ்பெற்ற யாதகிரி குட்டா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி நடைபோடும் சுஷ்மிதா கொனிடெலா, தற்போது ஆந்திர அரசு வழங்கியுள்ள இந்த ஆன்மீகப் பொறுப்பின் மூலம் பொதுவாழ்விலும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com