டாக்காவில் போராட்டம்
இந்தியா

வங்கதேசத்தில் ராமர் சிலை அவமதிப்பு: `ஜெய் ஸ்ரீ ராம்' என முழக்கமிட்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

சிலையை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.

வங்கதேசம் வடக்கு காய்பந்தா மாவட்டத்தில் பலாஸ்பாரியில் உள்ள ஒரு கோவிலில் ராமர், கிருஷ்ணர், சிவன் சிலைகளை கட்டும் பணி நடைபெற்றது.

இத்திட்டத்தில் சுமார் 22 கோடி ரூபாய் செலவிலான 81 அடி உயர ராமர் சிலையும், 50 அடி உயர கிருஷ்ணர் சிலையும், 30 அடி உயர சிவன் சிலையும் அடங்கும்.

கோவில் வளாகத்தின் ஒரு பகுதியான ராமர் சிலை, கிட்டத்தட்ட 80 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராமர் சிலை கட்டுவதை எதிர்த்து வரும் தீவிர இஸ்லாமியவாதிகள், ராமர் சிலையை அவமதித்ததாகக் கூறப்பட்டது. மேலும் கட்டுமான பணி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாநில அளவில் சர்ச்சை தொடங்கி, போராட்டமாக உருவெடுத்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் டாக்காவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் தீப்பந்த ஊர்வலத்தில் கூடி, "ஜெய் ஸ்ரீ ராம்" என முழக்கமிட்டனர்.

மேலும் சிலையை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் செய்வதை போலீசார் தடுத்ததை அடுத்து, போராட்டக்கரார்களுடன் சிறு மோதல் ஏற்பட்டது.

இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தா கோயில் குழு, கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு இஸ்லாமியக் குழுக்களால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும் கோயில் குழுவின் தலைவர் ஹரிதாஸ் சந்திர தாஸ், அச்சத்தின் காரணமாகப் பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.