இந்தியா

சிங்கப்பூருக்கு ஏற்றுமதியான பங்கனபள்ளி மாம்பழங்கள் - விவசாயிகளுக்கு இரு மடங்கு வருமானம்

ஆந்திர பிரதேசத்தில் உள்ள உணவு தர பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பழத்தோட்டங்களில் இருந்து சிங்கப்பூருக்கு கடல்வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

பங்கனபள்ளி மாம்பழம்:

ஆந்திரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் பங்கனபள்ளி மாம்பழங்கள் (Banganapalli mangoes) அதிகாரப்பூர்வ புவிசார் குறியீடு பெற்று, இந்தியாவின் மிகவும் பிரபலமான மாம்பழ ரகங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த வகை மாம்பழங்கள் அதன் பொன்மஞ்சள் நிறம், இனிமையான நறுமணம், நார் இல்லாத சதைப்பகுதி மற்றும் மிகுந்த இனிப்புச் சுவைக்காக சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

இந்த ரக மாம்பழங்கள் சர்வதேச சந்தைகளில் அதிகப்படியான தேவையைக் கொண்டுள்ளதுடன், ஏற்றுமதியில் மேலும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

சிங்கப்பூருக்கு ஏற்றுமதியான பங்கனபள்ளி மாம்பழங்கள்:

இந்நிலையில் சிங்கப்பூருக்கு ஐந்து மெட்ரிக் டன் எடையுள்ள உயர்தர பங்கனபள்ளி மாம்பழங்கள் வணிக ரீதியாக கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதன்மூலம் விவசாயிகளுக்கான வருமானம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள உணவு தர பாதுகாப்பு (ஜிஏபி) சான்றிதழ் பெற்ற பழத்தோட்டங்களில் இருந்து, குளிரூட்டப்பட்ட கடல்வழி சரக்கு போக்குவரத்து மூலம் ஓசம் ஃபுட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்தது.

இந்த பங்கனபள்ளி மாம்பழங்கள் உள்நாட்டில் ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், சிங்கப்பூருக்கு ஒரு கிலோ ரூ.50க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.