அயோத்தி ராமர் கோவில் மேம்பட்டுக்காக ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு செய்யப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிக்க உத்தரப் பிரதேச பாஜக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது.
இந்நிலையில் ராமர் கோவிலில் நடந்துள்ள நன்கொடை கொள்ளை நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளதைக் காட்டுகிறது என்று உத்தவ் தாக்கரே சிவசேனா உடைய சாம்னா இதழ் விமர்சித்துள்ளது.
அந்த இதழின் தலையங்கத்தில்,
"ராமர் கோவில் மேம்பாடு என்ற பெயரில் உண்மையில் என்ன நடக்கிறது? கடவுளின் உண்டியலையே கொள்ளையடிப்பது என்பதை இப்போது நாடே நேரில் கண்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த நன்கொடைகள், தங்கம், வெள்ளி மற்றும் நகைகள் அனைத்தும் பகிரங்கமாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அன்று கஜினி முகமது சோமநாதர் கோவிலைக் கொள்ளையடித்ததைப் போல, இன்று பாஜக ராமர் கோவிலைக் கொள்ளையடித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோல்காபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியின் மடியில் அமர்ந்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குச் பதிலடி கொடுத்துள்ள சாம்னா இதழ்,
"கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பல முக்கியக் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்ளையர்கள் அனைவரும் பாஜக கட்சிக்குள்ளேயே, அமித் ஷாவின் மடியில் தான் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் எவ்விதப் பங்களிப்பும் செய்யாத இந்த மனிதர்கள், தாக்கரேவை நோக்கி விரல் நீட்டுகிறார்கள். இது அமித் ஷாவின் மோசமடைந்து வரும் மனநல ஆரோக்கியத்தையே காட்டுகிறது" என தெரிவித்தார்.