வளைகுடா பிராந்தியத்தில் நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை அதிகரிக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், பெட்ரோல், டீசலுக்கும் அந்த நிலை வரலாம் என மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித பதற்றமும் வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சக இணைச்செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெயுடன் இயங்கி வருகின்றன. நாட்டில் போதுமான அளவு பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. எந்தவித தட்டுப்பாடும் இல்லை. நாடு முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயல்பாக இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக்கூறிய அவர், நுகர்வோரை எரிபொருள் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு பெட்ரோல் போடுவதற்கு கூட்டமாக குவிந்துள்ளனர்.
போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறும் நிலையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் பெட்ரோல் நிரப்பி வருகின்றனர்.