அசாமில் நாளை தொடங்கவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அஸ்ஸாமி, ஆங்கிலம் மற்றும் போடோ மொழிகளுடன் இந்தி மொழியும் அலுவல் மொழியாக அறிமுகப்படுத்தப்படும் என்று சபாநாயகர் ரஞ்சித் குமார் தாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் ரஞ்சித் குமார் தாஸ் பேசியபோது, “ நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அஸ்ஸாமி, ஆங்கிலம் மற்றும் போடோ மொழிகளுடன் சட்டமன்றத்தில் அலுவல் மொழியாக இந்தியும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தி ஒரு தேசிய மொழி என்பதால் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவையில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
சட்டமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்பும் ஏ.எல்.ஏ.டிவி.க்கு ‘அஸ்ஸாம் பிதான் சபா டிவி’ என பெயர் மாற்றம் செய்ய குழு முடிவு செய்துள்ளது” என்று சபாநாயகர் கூறினார்.
இதற்கிடையே சட்டமன்றத்தில் அலுவல் மொழிப் பிரிவில் இருந்து, போடோ நீக்கப்படும் என்ற யூகங்களை அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிராகரித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் கூறும்போது, “போடோ மொழி என்பது போடோ சமூகத்தின் வரலாறு மற்றும் மரபுகளை தன்னகத்தே கொண்டு, நமது மாநிலத்தை வரையறுக்கும் பன்முகத் தன்மையை வளப்படுத்துகிறது.
போடோ மொழியை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் அசாம் அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.
அதன் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், அது வரும் தலைமுறைகளிடம் செழித்து வளர்வதை உறுதி செய்யும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்றும் முதலமைச்சர் கூறினார்.