இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நவி பிள்ளைக்கு மத்திய அரசு வாழ்த்து தெரிவிக்காததைக் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை பூர்வீகமாக கொண்ட தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நவநீதம் நவி பிள்ளைக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நவி பிள்ளையின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளியை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர், விருது பெற்று 6 நாட்கள் ஆகியும் இந்திய அரசு மிகச் சிறிய வாழ்த்தைக் கூடத் தெரிவிக்கவில்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
"அசாதாரணமான சாதனைகளை புரிந்த இந்த பெண் அங்கீகாரம் பெறத் தவறியது துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு வாழ்த்து சொல்லாத குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று அவர் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேலுக்குச் செல்லும் விமானம் மீதான தாக்குதல் சதியை முறியடிக்க உதவிய இந்தியரான ஸ்மித் மச்சாருக்கு காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்ததா என சமூக வலைதளப் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குத் தரூர் பதிலளித்ததாவது, "என் பதிவுகளைப் பாருங்கள். அந்தச் செய்தி எனக்குத் தெரிந்தவுடனேயே அந்த வீரரைப் பாராட்டிவிட்டேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
1941ல் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இந்திய வம்சாவளி பெற்றோருக்குப் பிறந்த நவி பிள்ளை, ஒரு வழக்கறிஞர் ஆவார்.
இவர் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவுக்காக வாதாடினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகப் பணியாற்றியது உட்பட, மனித உரிமைகளைப் பாதுகாக்க பல தசாப்தங்களாக அவர் உழைத்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான பிள்ளை, காசாவில் இனப்படுகொலை நடந்துள்ளது என முடிவுசெய்த சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்திற்கும் தலைமை தாங்கினார்.
போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையின் உறவினர்கள், அவர் நோபல் அமைதிப் பரிசு வென்றதை கொண்டாடினர். தமிழக முதலமைச்சர் விஜயும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தனது விருதை சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக நவி பிள்ளை கூறினார்.
அவருக்கு விருது வழங்கப்படுவதற்கு இஸ்ரேல் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மோடி தலைமையிலான இந்திய அரசு அவருக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து சசி தரூரின் விமர்சனம் கவனம் பெற்றுள்ளது.