

சக விமானியிடம் இருந்து 174 பயணிகள் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு இஸ்ரேலின் 'ஜனாதிபதியின் குடிமக்கள் வீரதீர விருது' வழங்கப்படும் என்று இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில் கேப்டனாக இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டை சேர்ந்த சக விமானி ரத்தம் வர அவசரகால கோடரியால் தாக்கியுள்ளார். விமானத்தை ஹைஜாக் செய்வதே ஓமன் விமானியின் நோக்கமாக இருந்தது என கூறப்படுகிறது.
அந்த விமானியுடன் ஸ்மித் மச்சார் தன் உயிரை பணயம் வைத்து போராடியுள்ளார். அந்நேரம் சத்தம் கேட்டு விமான பணியாளர்கள் மற்றும் சில பயணிகள் விமானி அறைக்குள் வந்து விமானத்தை தன்னிச்சையாக கட்டுப்படுத்த முயன்ற ஓமன் விமானியை அடக்கி கட்டிப்போட்டனர். ஸ்மித் மச்சார் ரத்த வெள்ளத்தில் மயக்கமுற்றார்.
ஆப் டியூட்டியில் இருந்த மற்றொரு விமானி விமானத்தை பாத்திரமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறக்கினார்.
ஸ்மித் மச்சார் அங்குள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராகி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இஸ்ரேல் பயணிகளை காக்க போராடிய அவரது வீரதீர செயலை இஸ்ரேல் மற்றும் உலக தலைவர்கள் பாராட்டினர்.
இந்த சூழலில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அவருக்கு இஸ்ரேல் நாட்டின் மிக உயரிய குடிமை விருதான, குடிமக்கள் வீரத்திற்கான ஜனாதிபதி விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
"இன்று நாம் கௌரவிக்கும் இஸ்ரேலிய வீரர்களுடன், இந்தியாவின் கேப்டன் ஸ்மித் மச்சார் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய நாங்கள் வாழ்த்துகிறோம்.
அவரது ஈடு இணையற்ற தைரியமும் தொழில்முறைத் திறனும் ஒரு பெரும் துயரச் சம்பவத்தைத் தடுக்க உதவியது.
அவர் குணமடைந்தவுடன், இஸ்ரேல் மக்கள் சார்பாக அவருக்கு ஜனாதிபதியின் குடிமை வீரதீர விருதை வழங்குவது எனக்குப் பெருமைக்குரிய விஷயமாக இருக்கும்," என்று ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய உளவுத்துறை அறிக்கைபடி, துணை விமானி ஹமாமி விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அதை டெல் அவிவ் நகருக்கு ஓட்டிச் சென்று ஒரு கட்டிடத்தில் மோதச் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
கேப்டன் மச்சரின் வீரச் செயலால் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கவும் உதவிய ஐந்து இஸ்ரேலியர்களுக்கு ஏற்கனவே ஹெர்சாக் வீரதீர விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தகைது.