தொகுதி மறுவரையறை மசோதாவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொகுதி மறுவரையரைக்கு ஆதரவு தெரிவித்த திமுகவை பின்வாங்கச் செய்ய ராகுல், சோனியா, கார்கே மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் வந்து ஸ்டாலினிடம் பேசியபோதும் பலனில்லை.
அதேபோல இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த மகாரஷ்டிராவின் சரத் பவார் தேசியவாத காங்கிரசும் மசோதாவுக்கு ஆதரவளித்தது.
இந்த சூழலில் ஜார்கண்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கட்சி தொகுதி மறுவரையரை மசோதாவை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறையால் ஜார்க்கண்டில் பட்டியல் பழங்குடியினருக்கான ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்மொழியப்பட்ட மசோதாவின் சாத்தியமான சாதக பாதகங்களை ஆராய்ந்து ஜேஎம்எம் முடிவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஜேஎம்எம் கட்சியில், மக்களவையில் மூவர் மற்றும் மாநிலங்களவையில் மூவர் உட்பட மொத்தம் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஜார்க்கண்டில் தற்போது 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் ஐந்து பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு முன்மொழிந்துள்ள 50% இட அதிகரிப்பால், மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயரும்.
மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினருக்கான ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று ஜே.எம்.எம். கட்சி நம்புவதாக தெரிகிறது.
இந்த மசோதா, மாநிலத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், நாடாளுமன்றத்தில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்திற்கும் எந்த அளவிற்கு உதவும் என்பதை கட்சி ஆராய்ந்து வருவதாக ஜே.எம்.எம். வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சூழலில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில், நேற்று அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஜேஎம்எம் எம்.பி.க்களின் கூட்டம் நடைபெற்றது.
எம்.பி.க்கள் சர்ப்ராஸ் அகமது, பைத்யநாத் ராம், மக்களவை எம்.பி.க்கள் விஜய் ஹன்ஸ்டாக், ஜோபா மஞ்சி, நளின் சோரன் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.