தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக நிலைப்பாட்டிற்கு இபிஎஸ் ஆதரவு!

தி.மு.க.வின் இரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக நிலைப்பாட்டிற்கு இபிஎஸ் ஆதரவு!
Published on: 

மத்திய அரசு நாளை (நவ.30) நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுகவின் இந்த நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது;

“1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என திமுக தெரிவித்தது. அந்த நிலை 25 ஆண்டுகளுக்கு தொடரவேண்டும் என தெரிவித்தது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

எந்தச் சூழ்நிலையிலும் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கான தொகுதிகள் குறையாது என ஏற்கெனவே உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தி உறுதிமொழி அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 543 தொகுதிகளில் தமிழ்நாட்டின் பங்கு 7.18%. அது குறையாது என தெரிவித்தனர். அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் 50% தொகுதிகளை உயர்த்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 59 ஆக உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அவ்வாறு 59 இடங்களாக உயரும்போது, தமிழ்நாட்டின் பங்கு சதவிகிதம் 7.18%-லிருந்து 7.23% ஆக அதிகரிக்கும். திமுக வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால்தான் அவர்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் இந்த டிசம்பருக்குள் முடிவெடுக்கப்படாவிட்டால், புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கணக்கில் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை நடைப்பெற்றால் தமிழ்நாட்டிற்கு இழப்பு.

மேலும், 1971 கணக்கெடுப்பின் அடிப்படையிலான இந்த நடைமுறை 2051 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் பல கட்சிகளின் ஆதரவும் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி நிலைப்பாடுகள் இருந்தாலும், இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு கிடையாது. ” என தெரிவித்தார்.

X