சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கவுதம் இந்தியா கேட் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட அங்கிதா பண்டாரியின் பெற்றோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்
சிக்கிம் மாநில ஆளுநராக துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
68 வயதான துஷ்யந்த் கவுதம் முன்னதாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், SC பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு உத்தரகாண்டில் உள்ள விடுதியில் வரவேற்பாளராக இருந்த அங்கிதா பண்டாரி சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.
அவரது கொலை குற்றச்சாட்டில் துஷ்யந்த் கவுதம் பெயர் அடிபட்டது, அப்படிப்பட்டவருக்கு எப்படி கவர்னர் பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கிடையே டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் அங்கிதா பண்டாரியின் பெற்றோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கிதா பண்டாரி கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் சிபிஐ வழக்கு முடியும் வரை துஷ்யந்த் குமார் கவுதமின் ஆளுநர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.
நேற்று இரவு இந்தியா கேட் சென்று அவர்களை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் இந்தியா கேட் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனிடையே இன்று அதிகாலை 4 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அங்கிதா பண்டாரியின் தாயும் தந்தையும் டெல்லி காவல்துறையால் பலவந்தமாக கைது செய்யப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியா கேட்டில் அமர அனுமதிக்கப்படாவிட்டால், தங்களது சொந்த வீட்டிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.
அங்கிதா பண்டாரியின் தந்தை கூறுகையில், "நாங்கள் அரசுக்கு 24 மணி நேரம் அவகாசம் தருகிறோம்; சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் குமாரின் நியமனத்தை அது ரத்து செய்தே ஆக வேண்டும்.
இந்த நியமனம் திரும்பப் பெறப்படாவிட்டால், நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்குவார்கள், அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்," என்று எச்சரித்தார்.
நேற்று ராகுலுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாதா, பண்டாரியின் பெற்றோர் கைது செய்யப்பட்டது குறித்து கூறுகையில், "இது என்ன மாதிரியான நடவடிக்கை? நான்கு ஆண்டுகளாக நீதி கேட்டு அலைந்து திரியும் ஆதரவற்ற பெற்றோருக்கு எதிரான ஒரு கொடூரமான செயல்.
அவர்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, முக்கியக் குற்றவாளி ஆளுநராக நியமிக்கப்படுகிறார். அதற்கும் மேலாக, இந்தப் பெற்றோர் இத்தகைய கொடூரமாக நடத்தப்படுகிறார்கள்," என்று கூறினார்.