முரசு புயலால் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.1,919 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
'அர்னாப்' மற்றும் 'முரசு' ஆகிய அடுத்தடுத்த புயல் ஆந்திர மாநில விவசாயிகள் மற்றும் மக்களை பாதித்துள்ளது.
அமராவதியில் அதிகாரிகளுடன் மாநிலத்தின் புயலுக்குப் பிந்தைய நிலைமையை ஆய்வு செய்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்.
"முரசு புயலால் பாதிக்கப்பட்ட பாபட்லா மற்றும் குண்டூர் மாவட்டப் பகுதிகளை நாங்கள் நேரில் சென்று ஆய்வு செய்வோம், முதற்கட்ட மதிப்பீட்டின்படி, மாநிலத்திற்கு ரூ.1,918.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று சந்திரபாபு நாயுடு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார். இதற்காக மத்திய அரசிடம் அவர் இடைக்கால நிவாரணம் நாடியுளளார்.
இதனிடையே தடையற்ற மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம், சாலை சீரமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
புயல் தொடர்பான சம்பவங்களில் மாநிலத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
முதற்கட்ட மதிப்பீடுகளின்படி, முராசு புயலால் 1.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் 1.8 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6,749 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதனால் 12,586 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயலால் 983 வீடுகள், 346 படகுகள் மற்றும் 220 மீன்பிடி வலைகள் சேதமடைந்ததாக அவர் தெரிவித்தார்.
வெள்ள நீர் வடிய இன்னும் 72 மணி நேரம் ஆகும் என்றும், அதன் பின்னரே பயிர் சேதம் குறித்த துல்லியமான மதிப்பீடு தெரியவரும், புயலால் மொத்தம் 204 கி.மீ நீளமுள்ள 74 கிராமப்புறச் சாலைகள் சேதமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது