மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை கத்தியால் தாக்க முயன்றதாகப் பரவிய புகாரில் எந்தவிதமான உண்மையும் ஆதாரமும் இல்லை என்று கொல்கத்தா நகர காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி காளிகாட்டில் உள்ள தனது வீட்டின் அருகில் நேற்று (அக். 13) மாலை நடைபெற்ற துர்கா பூஜை விழாவைத் தொடங்கிவைக்கச் சென்றார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியபடியும், போதையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக மம்தா பானர்ஜியை நெருங்க முயன்றதாகவும் தகவல்கள் பரவின. மேலும், அந்தப் பெண் மம்தாவின் உறவினர் என்றும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்துப் பேசிய கொல்கத்தா காவல்துறை ஆணையர் அஜய் குமார் நந்த், மம்தா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், அந்தப் பெண் உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாகத் திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டோலா சென் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் கேள்விகள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.