பிரதமர் மோடியின் மறைந்த தந்தையைப் பற்றி தரக்குறைவாக பேசியதாக கார்கேவையும் காங்கிரசையும் அமித் ஷா சாடியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் தலைவர் கார்கே, அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.
வாக்குத் திருட்டுக்கு பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என பேசினார்
கார்கே கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பார்வையாளர்களில் இருந்த நபர், "மோடி போகமாட்டார்" என்று கோஷமிட்டார்.
இதனால் கோபமடைந்த கார்கே, "மோடி என்ன... மோடியின் தந்தையும் பதவி விலக வேண்டும்" என்று மூன்று முறை கூறினார்.
காங்கிரஸ் தொண்டர்கள் அந்த நபரை வெளியேற்றினர்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தள பதிவில், "பாட்னாவில் மோடியின் தந்தையைப் பற்றி இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததன் மூலம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அனைத்து கண்ணியத்தையும் மீறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி மோடியையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ அவதூறு செய்வது இது முதல் முறையல்ல. அவர்கள் அவரது தாயாருக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.
அவரை 'மரணத்தின் வியாபாரி' என்று அழைத்தனர். அவரை 'தேநீர் விற்பவர்' என்று அழைத்து அவரது வறுமையைக் கேலி செய்தனர்.
ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு நாளும் அநாகரிகத்தின் எல்லைகளை மீறி வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக சந்தித்துவரும் தேர்தல் தோல்விகளால் காங்கிரஸ் கட்சி மிகுந்த விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளதால், தற்போது அதனிடம் கொள்கைகள் எதுவுமில்லை. வசவு அரசியல் மட்டுமே எஞ்சியுள்ளது.
பொதுமக்களிடையே தனது ஆதரவை இழந்த காங்கிரஸ், தற்போது தனது சொந்தத் தொண்டர்களிடையேயும் செல்வாக்கை இழந்து வருகிறது.
பிரதமர் மோடியையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ பற்றி அவர்கள் இழிவான கருத்துக்களைத் தெரிவிக்கும்போதெல்லாம், பொதுமக்கள் காங்கிரஸுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். " என்று குறிப்பிட்டுள்ளார்.