இந்தியா

கண்ணாடியை உடைத்து 27 குழந்தைகள் மீட்பு - தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்!

குழந்தைகள் மரணத்திற்கு தெலங்கானா முதல்வர் இரங்கல், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைக்கு உத்தரவு.

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழக அரசு மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பச்சிளங்குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தன.

நள்ளிரவில் வெடித்த ஏசி

மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று நள்ளிரவு சுமார் 11:50 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. அங்குள்ள குளிரூட்டி ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அது பலத்த சத்தத்துடன் வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சில நிமிடங்களிலேயே வார்டு முழுவதும் அடர்ந்த கரும்புகையும், தீயும் சூழ்ந்து கொண்டது. இதனால் இன்குபிலட்டரில் இருந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

கண்ணாடியை உடைத்து குழந்தைகளை மீட்ட ஊழியர்கள்

விபத்து நடந்த சமயத்தில் அந்த வார்டில் 27-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்தைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்களும், பெற்றோர்களும் வார்டின் கண்ணாடி ஜன்னல்களை அடித்து உடைத்து, உள்ளே புகுந்து குழந்தைகளைப் பத்திரமாக வெளியே மீட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக 5 நாட்களேயான ஒரு ஆண் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

முதல்வர் ரேவந்த் ரெட்டி அவசர உத்தரவு

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ள அவர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக மின்சாரம் மற்றும் தீயணைப்புப் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் ஆணையிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT