இந்தியா

இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் இலக்கு - காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று, அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்குதான் தொகுதி மறுவரையறை மசோதா.

மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று, அரசியல் சாசனத்தைத் திருத்தி, பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான மற்றும் இறுதி இலக்கு என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வாக்கு "தொகுதி மறுவரையறைக்கு எதிரானதே தவிர, பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது அல்ல என மீண்டும் தெளிவுப்படுத்தினார்.

உண்மையிலேயே பாஜக பெண்கள் இட ஒதுக்கீட்டில் உறுதியுடன் இருந்தால், தற்போதைய 543 மக்களவை இடங்களிலேயே அதை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் 500 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போதே அவர்களுக்கே பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காதபோது, 815 பேர் எனக் கொண்டுவரும்போது நிலை என்னவாகும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மக்களவையில் பெரும்பான்மையை பெறுவதற்காகவே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) போன்ற எதிர்க்கட்சிகளை பாஜக உடைத்து வருகிறது எனவும் சாடியுள்ளார்.

தொடர்ந்து சாதி கணக்கெடுப்பிற்குப் பிறகே, தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும், 2029 மக்களவைத் தேர்தல் 543 இடங்களில் நடத்தப்பட வேண்டும், அதில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார்.