அபிஷேக் பானர்ஜி அலுவலகம்  
இந்தியா

மேற்கு வங்கத்தில் அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிப்பு.. திரிணாமுல் காங்கிரஸ் கொந்தளிப்பு

அருவருப்பான, வன்முறை அரசியல் இது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும் மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பரகனா மாவட்டத்தின் அம்டலா பகுதியில் இயங்கி வந்த அபிஷேக் பானர்ஜியின் அப்பகுதியின் அலுவலகம் முறையான கட்டிட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஜூன் 30 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஜூலை 7 அன்று இரண்டாவது நோட்டீஸும் அனுப்பப்பட்டு, ஜூலை 15க்குள் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

அபிஷேக் பானர்ஜி தரப்பு

வழங்கப்பட்ட இரண்டு நோட்டீஸ்களுக்கும் அபிஷேக் பானர்ஜி தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அவரும் நேரில் ஆஜராகவில்லை. இதன் காரணமாகவே சட்டப்பூர்வமாக இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு இந்த அலுவலகம் இடிக்கப்பட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கொந்தளிப்பு

அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

"இந்தக் கட்டிட விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. பாஜக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததிலிருந்து வங்காளத்தில் ஒரு புதிய மோசமான கலாச்சாரத்தைப் புகுத்தி வருகிறது. அதுதான் 'புல்டோசர் கலாச்சாரம்'.

இன்று நாம் பார்த்தது பாஜகவின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. அருவருப்பான, வன்முறை அரசியல் இது. மாநிலத்தில் பாஜகவின் ரவுடி ராஜ்ஜியம் முழுமையாக அரங்கேறி வருகிறது" என்று சாடியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் பூசல்

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க தேர்தலில் பாஜவிடம் தோற்றது.

அதன் 80 எம்எல்ஏகளில் 50க்கும் மேற்பட்டோர் தனி அணியாக பிரிந்து கட்சியை தங்களுக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல எம்.பிக்களும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

கட்சியில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. இந்த சூழலில் அவரின் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தால் இடித்து தரைமட்டக்கப்பட்டுள்ளது.