E20 எரிபொருளுக்கு எதிரான தங்கள் கட்சியின் பிரசாரம் தொடரும் என்றும், இதன் அமலாக்கத்தை மக்கள் தடுக்க விரும்பினால் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
E20 எரிபொருளுக்கு எதிரான 2.30 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க, சுமார் 100 பேருடன் பிரதமர் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற கெஜ்ரிவால் மற்றும் பிற கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் ஃபிரோஸ் ஷா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலங்களிலும் இக்கொள்கையை அமல்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்போம்.
கோவா மற்றும் குஜராத்தில் எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அங்கே E20 நடைமுறைக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளில் இதை எதிர்ப்பார்கள்.
இன்று நடைபெற்ற பேரணியில் சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்றாலும், சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் கேலிப் பேச்சுகளையும் எதிர்கொண்ட போதிலும் அவர்கள் துணிச்சலுடன் பங்கேற்றனர்.
மக்கள் E20-லிருந்து விடுபட விரும்பினால், அவர்கள் பெருமளவில் வீதிகளுக்கு வந்து போராட வேண்டும்.
எத்தனால் உற்பத்தியால் இந்திய விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றும், மாறாக இக்கொள்கை அமெரிக்க விவசாயிகளுக்கே பயனளிக்கும். இந்திய விவசாயிகளை விட வெளிநாட்டு நலன்களுக்கே இக்கொள்கை முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தை எதிர்த்து நின்று அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தான் இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும், E20-ஐ அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை உணர்த்தும் வகையிலான பதிலை பெற்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக சஞ்சய் சிங் கூறுகையில் "இன்று நாடாளுமன்றத்தில் நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன். அரசு E20-ஐ அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதை அந்தப் பதில் தெளிவுபடுத்துகிறது" என்றார்.
எத்தனால் கலந்த பெட்ரோலால் மைலேஜ் குறைவாக கிடைப்பதாகவும், என்ஜின் பராமரிப்பு செலவு கூடுவதாகவும் வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.