‘ஓரளவு சேதம் ஏற்படலாம்’ - எத்தனால் பெட்ரோல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

எத்தனால் பெட்ரோலால் இஞ்ஜின் சேதம் உள்ளிட்ட சேதங்களை தாண்டி , தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது.
‘ஓரளவு சேதம் ஏற்படலாம்’ - எத்தனால் பெட்ரோல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!
Published on

கடந்த சில மாதங்களாக எத்தனால் பெட்ரோல் விவகாரம் இந்தியாவில் பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ள நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் இன்ஜின் சேதம் அடைவதாகவோ அல்லது மைலேஜ் குறைவதாகவோ எந்தவொரு அறிவியல் ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஏப்ரல் 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட, அதாவது 2005 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2016-க்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பழைய BS-III மற்றும் E10 இன்ஜின்கள் கொண்ட வாகனங்களில் மட்டும் சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டியிருக்கலாம். அது ஒரு சாதாரண வேலையே என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

எத்தனால் பெட்ரோல் தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால் பெட்ரோலால் மைலேஜ் குறையாது என்றும், வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளைத் தாண்டி பல்வேறு காரணிகளால் அடிவாங்குகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

எத்தனால் பெட்ரோல் மீதான விவாதம் என்ன?

எத்தனாலாற்றலின் அடர்த்தி பெட்ரோலை விடக் குறைவு என்பதால், வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 10% வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மார்ச் 2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களின் என்ஜின்கள் மற்றும் எரிபொருள் குழாய்கள் எத்தனாலின் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையால் துருப்பிடிக்கவோ அல்லது சேதமடையவோ வாய்ப்புள்ளது.

ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க அதிக அளவு தண்ணீர் தேவைப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்ற கவலையும் எழுந்துள்ளது. அரசு சொல்வதுபோல கரும்பு, உடைந்த அரிசி போன்ற பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டாலும் அதனை விளைவிக்கவும் தண்ணீர் என்பது மிக அவசியம்.

ஏற்கனவே இந்தியாவில் கோடைக்காலங்களில் குடிநீருக்கே அல்லல்படும் நிலை இருக்கும்போது, இதன் பயன்பாடும் தண்ணீர் பற்றாக்குறையை அதிகப்படுத்தும்.

எதிர்க்கட்சிகள், நுகர்வோர் என பலதரப்பட்ட மக்களின் வாதங்கள் மேற்குறிப்பிட்டவை. ஆனால் மத்திய அரசு அனைத்திற்கு விளக்கம் அளித்து இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com