மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) கட்சியில உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் நேற்று இணைந்தனர். இந்த நிலையில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-
துரோகிகளால் 2022-ல் அரசு கவிழ்க்கப்பட்டதிலிருந்து, `Fake நாத் ஷிண்டே' ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரிலும் தனது பொறுப்புகளை தட்டிக்கழித்து வருகிறார். கேள்வி நேரத்தில் நாங்கள் எழுப்பும் கேள்விகள் உட்பட அனைத்தும் பொதுமக்களின் கேள்விகள். அவை மகாராஷ்டிராவின் பிரச்சினைகள் சார்ந்தவை. எனவே அவற்றுக்கு உரிய பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், குறிப்பிட்ட நாளில் பதிலளிக்க வேண்டிய அமைச்சராக வேறொருவரை அவர் நியமிப்பதையே பார்க்கிறோம். அப்படியிருக்க, அந்த துறையை ஏன் உங்கள் வசம் வைத்துக்கொண்டுள்ளீர்கள்? அதை நிரந்தரமாகவே அவர்களிடம் ஒப்படைத்துவிடலாமே. நிதி முறைகேடு, மோசடி மற்றும் ஊழல் செய்வதற்காகவே அந்த துறையை தன்வசம் வைத்துக்கொண்டு, பதிலளிக்க வேண்டிய நேரம் வரும்போது மட்டும் ஓடிவிடுகிறீர்கள்.
பதில் சொல்லத் தெரியவில்லை என்றால், எதற்காக அந்தத் துறைக்கு அமைச்சரானீர்கள்? தற்போதைய சூழலைப் பாருங்கள், முதலமைச்சரே தனது துறைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார். முதலமைச்சரால் அதைச் செய்ய முடியும் என்றால், உங்களால் ஏன் முடியாது? உங்களிடம் என்ன குறை இருக்கிறது? ஒருவேளை தன்னம்பிக்கை இல்லாமை காரணமாக இருந்தால் கூட நான் அதைப் புரிந்துகொண்டிருப்பேன்.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.