இந்தியா

40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுப் பயணம்.. வரும் 10ம் தேதி நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துகொண்டு வருகிற 11-ந்தேதி இந்தியா திரும்புகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அரசுமுறை பயணமாக முதல் முறையாக நியூசிலாந்துக்கு செல்கிறார். இரு நாடுகளும் கடந்த ஏப்ரல் மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 95 சதவீத சுங்க வரி நீக்கப்பட்டு உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் பிரதமர் மோடி நியூசிலாந்து செல்ல உள்ளார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு..

கடந்த 1986-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி அரசுமுறை பயணமாக நியூசிலாந்து சென்றார். அதன்பிறகு இந்திய பிரதமர்கள் யாரும் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை.

40 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வருகிற 10-ந்தேதி நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். ஆக்லாந்து அரசு மாளிகையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பிரதமர் மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

அதன்பிறகு நியூசிலாந்து எதிர்க்கட்சி தலைவர் கிறிஸ் ஹிப்கின்சை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்குள்ள வணிக பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இதையடுத்து பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்துகொண்டு வருகிற 11-ந்தேதி இந்தியா திரும்புகிறார்.

வரலாற்று சிறப்புமிக்கது

மோடியின் நியூசிலாந்து பயணம் குறித்து அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இன்று சமூக வலைதள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் நியூசிலாந்திற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் நியூசிலாந்தில் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், பிரதமர் மோடியின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது.

இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகும். மேலும், நியூசிலாந்தின் பொருளாதார செழிப்பிற்கு மிகவும் முக்கியமான நாடாகவும் அது திகழ்கிறது.

ஏப்ரல் மாதம் கையெழுத்தான நியூசிலாந்து - இந்தியா இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்தது.

இந்த ஒப்பந்தம் நியூசிலாந்திற்கு அதிக வேலை வாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும். இது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையில் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய வாய்ப்பு களை உருவாக்கும். இதன் மூலம் நியூசிலாந்து சமூகங்க ளுக்கு அதிக வருவாய் கிடைப்பதோடு, வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டு ஊதியமும் உயரும்.

இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான கலந்துரையாடலில் வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், சுற்றுலா, விளையாட்டு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் ஆகியவை இடம்பெற உள்ளது.

இந்த பயணம், இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான ஒரு வெற்றிகரமான கூட்டாண்மையை கொண்டாடுவதாகும்.

பிரதமர் மோடியை நியூசிலாந்திற்கு வரவேற்பதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.