ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 1 மாத காலமாக போர் நடந்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பல உலக நாடுகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.
குறிப்பாக ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் தற்போது எரிபொருள் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
சுவாரஸ்யமாக ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போருக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஏ இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சூழலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மேற்கு ஆசியப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக உருவெடுத்துள்ளது.
இது இந்தியாவின் பிராந்திய ராஜதந்திரத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பின்னடைவு.
இந்தத் தீவிரமான தர்மசங்கடத்தை மறைக்க, அனுபவம் வாய்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன்னால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்.
பயங்கரவாத பின்னணி கொண்ட பாகிஸ்தான், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான இடத்தைப் பெற்றுள்ளது என்பது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி.
மோடியின் வெளியுறவுத் தந்திரம் வெறும் வெற்றுப் பேச்சுகளாகவும், கோழைத்தனமாகவும் இருந்துள்ளது.
26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பாகிஸ்தானின் சதித்திட்டத்தை உலகிற்குத் தெளிவுபடுத்தி, அந்த நாட்டைத் தனிமைப்படுத்தியது.
2025 ஏப்ரல் 22 அன்று பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் நச்சுத்தன்மை வாய்ந்த பேச்சுகளே காரணம் எனத் தெரிந்தும், இந்தியாவால் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த முடியவில்லை.
உண்மையில், பாகிஸ்தான் தற்போது ஒரு முக்கியமான நாடாக உருவெடுத்துள்ளது. 2025 மே 10 முதல், ராணுவத் தளபதி ஆசிம் முனீர், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்குப் பிடித்தமானவராக மாறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
இதுவே நமது 'சுய பிரகடன விஸ்வகுரு' இந்திய ராஜதந்திரத்திற்கு வழங்கியுள்ள தனித்துவமான பங்களிப்பு. வெளியுறவு அமைச்சரின் அடுக்குமொழி வசீகரப் பேச்சுகளால் இந்த கறையை ஒருபோதும் துடைக்க முடியாது." என்று குறிப்பிட்டுள்ளார்.