சிவசேனாவில் இணைந்த உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள்
இந்தியா

6 புலிகள் தற்போது எங்கள் பக்கம்: ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.க்கள்

உத்தவ் தாக்கரேயின் சிவசேனா (UBT) கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சியில் 6 எம்.பி.க்கள் சேர்ந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததாக குற்றஞ்சாட்டி சிவசேனா கட்சியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிளவு ஏற்பட்டது. பின்னர், இந்த பிளவு சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டது. பாஜக உடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

சிவசேனா (UBT)

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி சிவசேனா (UBT) என்று அழைக்கப்பட்டு வந்தது. 2024 மக்களவை தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) 9 இடங்களில் வெற்றி பெற்றது.

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 20 எம்.பி.க்கள் பிரிந்து சென்று மற்றொரு கட்சியில் இணைந்துள்ளனர். 3-ல் 2 பங்கு எம்.பி.க்கள் பிரிந்ததால் மம்தாவால் எதையும் செய்ய முடியவில்லை.

ஏக்நாத் ஷிண்டே- சிவசேனா

இதற்கிடையே சிவசேனா (UBT) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக யூகச் செய்திகள் வெளியான வண்ணம் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை 6 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில இணைந்துள்ளனர்.

ஓம்ராஜே நம்பால்கர், சஞ்சய் தினா பாடீல், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், நாகேஷ் பாடீல் அஷ்திகர், பவுசாகேப் வக்சாயுரே ஆகியே 6 எம்.பி.க்கள் சிவசேனா (UBT) கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

6 புலிகள் தற்போது இங்கு வந்துள்ளன. அவர்கள் தற்போது உண்மையான சிவசேனா குடும்பத்தில் இணைந்துள்ளனர். உண்மையான சிவசேனா குடும்பத்திற்கு அவர்களை வரவேற்கிறேன்.

நான்கு வருடத்திற்கு முன்னதாக 2022-ம் ஆண்டு ஜூன் 22-ந்தேதி சிவசேனா கட்சியுடன் பிளவு ஏற்பட்டு தனியாக வந்தோம். அப்போது எங்களுடன் 40 எம்.எல்.ஏ.-க்கள் வந்தனர். தற்போது, நாங்கள் சிக்ஸ் அடித்துள்ளோம். இது நான்கல்ல, சிக்ஸ். இது எங்களுடைய சிக்சர்.

இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.