இந்தியா

ஐதராபாத்தில் 36 டன் கலப்பட நெய் பறிமுதல் - '100 சதவீதம் சுத்தமான நெய்' என்று விற்பனை செய்தது அம்பலம்

உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ஐதராபாத் உணவு கலப்பட கண்காணிப்பு குழு இச்சோதனையில் ஈடுபட்டது.

தெலுங்கானாவில் 130 நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 36 டன் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. 100 சதவீதம் சுத்தமான நெய் என்ற பெயரில் விற்பனை செய்தது அம்பலமானது.

130 இடங்களில் சோதனை

கலப்பட நெய் தயாரிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து வந்த தகவலின்பேரில், ஐதராபாத்தில் சட்டவிரோதமாக கலப்பட நெய் தயாரிக்கும் மற்றும் வினியோகிக்கும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ஐதராபாத் உணவு கலப்பட கண்காணிப்பு குழு இச்சோதனையில் ஈடுபட்டது.

39 நெய் தயாரிப்பு ஆலைகள், 91 நெய் விற்பனை கடைகள் உள்பட 130 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

சுத்தமான நெய்

சோதனையின்போது, செயற்கையாக நெய் தயாரிப்பதற்கு கலப்படமான, தரம்குறைந்த உபகரணங்கள். கெடுதலான, அங்கீகாரம் பெறாத ரசாயன சேர்க்கை பொருட்கள் ஆகியவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பால் அல்லாத பொருட்களான பாமாயில், வனஸ்பதி, கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர், ஸ்டார்ச், சுத்தமான நெய் போன்ற சுவை, மணம் அளிக்கும் செயற்கை வாசனை பொருட்கள் ஆகியவற்றை கலந்து நெய் தயாரித்தது தெரிய வந்தது.

100 சதவீதம் சுத்தமான நெய்', 'பிரீமியம் நெய்', இயற்கை நெய் என்ற போலியான பெயர்களில் இந்த நெய் சந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பாக்கெட்டுகளில், பேட்ச் எண், உணவு தர நிர்ணய ஆணையத்தின் உரிமம், பகுப்பாய்வு சான்றிதழ், உற்பத்தி தேதி, பேக்கிங் மற்றும் காலாவதி தேதி போன்ற விவரங்கள் இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து வந்த மில்க் கிரீம் கலப்பட நெய்யில் 10 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை கலப்பட அளவு இருந்தது. கலப்படத்தின் அளவுக்கேற்ப உணவகம், டிபன் சென்டர்கள், இனிப்பு உற்பத்தி நிறுவனங்கள், ஆயுர்வேத கடைகள் ஆகியவற்றுக்கு விற்பனை செய்துள்ளனர்.

கலப்பட நெய்

கலப்பட நெய் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட மில்க் கிரீம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வினியோகஸ்தர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

தெலுங்கானா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது, மக்களின் உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறிமுதல்

மலிவான பொருட்களை வைத்து குறைந்த செலவில் தயாரித்து, அசல் நெய் என்று அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டி உள்ளனர்.

36 டன் கலப்பட நெய், மில்க் கிரீம், பாமாயில், வனஸ்பதி, செயற்கை நெய் வாசனை பொருட்கள், ஸ்டார்ச், ரசாயன சேர்க்கை பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விரிவான ஆய்வுக்கூட ஆய்வுக்காக மாதிரிகளை சேகரித்து அனுப்பினர். வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.