தெலங்கானா அரிசி ஆலைகளில் அதிரடி சோதனை: ரூ.700 கோடி நெல் நிலுவைத் தொகையை மீட்டு அரசு சாதனை!

நேர்மையாகச் செயல்படும் ஆலை அதிபர்களுக்கு அரசு துணையாக இருக்கும்.
Telangana rice mills
Published on

தெலங்கானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நெல் நிலுவையைத் திரும்பச் செலுத்தாத அரிசி ஆலை அதிபர்கள் மீது மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக நடத்திய சோதனையில், சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் இருப்பு மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரசு விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இதுவரை 700 கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை மீட்கப்பட்டுள்ளது.

முறைகேடு செய்வோர் மீது கடும் நடவடிக்கை

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், அரசுக்குச் சொந்தமான ஒவ்வொரு தானியத்தின் மதிப்பையும் முழுமையாக மீட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். நேர்மையாகச் செயல்படும் ஆலை அதிபர்களுக்கு அரசு துணையாக இருக்கும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் ஆலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நெல் அரவை செய்யும் பணிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன சேமிப்பு மையங்கள்

எதிர்காலத்தில் தானியச் சேமிப்பில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, அதிக நெல் மகசூல் தரும் நல்கொண்டா, சூரியபேட்டை, நிஜாமாபாத், பெத்தபல்லி மற்றும் காமாரெட்டி ஆகிய மாவட்டங்களில் 'சைலோ' சேமிப்பு மையங்களைக் கட்ட முன்னோடித் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதற்காகத் தொகுதிக்கு 50 முதல் 100 ஏக்கர் வரை நிலம் ஒதுக்கப்பட்டு, இந்த மையங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் வழங்கப்படும். மேலும், உடனடித் தேவைகளுக்காகத் தனியார் சேமிப்புக் கிடங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் பழைய திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து நெல் சேமிப்பைப் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com