ஷ்ரவண் மாதத்தில் அசைவ உணவு கேட்டதற்காக தனது 30 வயது மகனை தாக்கி உயிரிழக்க செய்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு நபர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று வார்ஜே பகுதியில் நடைபெற்றது. உயிரிழந்தவர் மகேஷ் பகவத் கெய்க்வாட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையர் சாகர் கவாடே தெரிவித்தார்.
தற்காலிகத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த மகேஷ், மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும், தினமும் தனது பெற்றோரான பகவத் கெய்க்வாட் (64) மற்றும் பார்வதி கெய்க்வாட் (60) ஆகியோருடன் சண்டையிட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.
அவரது சகோதரர் அளித்த புகாரின்படி, ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மகேஷ், இரவு உணவிற்கு அசைவ உணவு கேட்டுள்ளார். புனிதமான மாதம் நடைபெற்று வருவதை காரணம் காட்டி அவரது தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்போது, பகவத் தனது மகனின் தலையில் தாக்கியதில் அவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரங்களை அழிப்பதில் மகேஷின் தாயார் தனது கணவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.
பகவத் கெய்க்வாட் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.