பிரதமர் மோடி தொடர்ச்சியாக 3-வது முறையாக பிரதமர் பதவி வகித்து வருகிறார்.
மத்தியில் காங்கிரசுக்கு எதிராக அசுர பலம் பெற்று அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில கட்சிகளோடு இணைந்தும், தனியாகவும் பாஜக வெற்றி பெற்று வருகிறது.
இதன் காரணமாகவும் பிரதமரின் தனிப்பட்ட செல்வாக்காலும் தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது.
2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள பிரதமர் மோடி 12 ஆண்டுகள் அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தார்.
இதன் பின்னர் தேசிய அரசியலில் கால் பதித்த மோடி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
இதன் பின்னர் நடைபெற்ற 2 தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிவாகை சூடியதை தொடர்ந்து பிரதமர் பதவியையும் அவர் தொடர்ச்சியாக வகித்து வருகிறார்.
இதன் மூலம் 12 ஆண்டுகளை கடந்து அவர் பிரதமர் பதவியில் நீடிக்கிறார்.
இப்படி முதல்-மந்திரி மற்றும் பிரதமர் பதவியில் 25 ஆண்டுகள் பணியாற்றியதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.
நாட்டின் உயரிய பதவிகளில் கால் நூற்றாண்டு காலமாக பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு உலக அரங்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் நலத்திட்ட உதவிகள் மற்றும் யாத்திரைகள் நடத்தவும் பாரதீய ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா நிர்வாகிகள் திருச்சியில் இன்று ஆலோசனை நடத்தினார்கள். சமயபுரம் சுங்கச்சாவடி அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.
தமிழக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக திருச்சி மாவட்ட தலைவர்கள் ஒண்டிமுத்து, அஞ்சாநெஞ்சன் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதமர் பிறந்தநாள் விழாவுக்காக பிரத்யேகமாக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 17-ந்தேதி வரை பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அப்போது ரத்ததான முகாம்கள், தூய்மை பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட உள்ளன.
பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத் மாநிலம் வாட்நகரில் இருந்து அவர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதி வரை மோட்டார்சைக்கிள் பேரணி மற்றும் சேவா ஜோதி யாத்திரை ஆகியவை நடைபெற உள்ளது. இதற்காக 10 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாடு தழுவிய அளவில் ஓவிய போட்டிகள், பேச்சு போட்டிகள் ஆகிய வையும் நடத்தப்பட உள்ளன.
ஒரே நாளில் வாட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய 2 இடங்களில் இருந்தும் ஒரே நாளில் 10 குழுவினர் இந்த யாத்திரை பயணத்தைத் தொடங்குகின்றனர்.
இந்த குழுக்களில் இடம் பெற்று இருப்பவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஒரு மாதத்திற்கு பிறகு வாட்நகரை வந்து அடைவார்கள். அதே நேரத்தில் புறப்படும் குழு ஒரு மாத காலம் பயணம் மேற்கொண்டு வாரணாசியை சென்று அடையும்.
வெளி மாநிலங்களுக்கு செல்லும் குழுவினர் தினமும் சுமார் 100 கி.மீ. பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பயணத்தின் போது மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்துகளில் சென்று பிரதமர் மோடியின் சாதனைகளை பாஜக -வினர் மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
மத்திய அரசு மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்பாடுகள் ஆகியவற்றை பொதுமக்களோடு கலந்துரையாடு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதன் மூலம் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா தலைவர்கள் பிரதமர் மோடியின் ஒரு மாத பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தொடங்கி இருக்கிறார்கள்.