பிரதமர் மோடி பிரதமர் மோடி
இந்தியா

12-வது சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவில் 35 ஆயிரம் பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி

கொல்கத்தாவில் 35 ஆயிரம் பேருடன் பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்தார். பாஜக ஆட்சியை பிடித்த நிலையில் முதன்முறையாக கொல்கத்தாவில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார்.

12-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் 35 ஆயிரம் பேர் பங்கேற்று யோகா செய்தனர். மக்களுக்கு மத்தியில் நின்று பிரதமர் மோடி யோகா செய்தார்.

இதில் யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேநேரத்தில் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு யோகா பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 10 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். மேலும் முக்கிய அம்சமாக ஹூக்ளி நதியில் சிறப்பு யோகா திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதில் சுமார் 500 படகுகளில் இருந்து கொண்டு ஏராளமானோர் ஒரே நேரத்தில் யோகா பயிற்சிகளை செய்கின்றனர். மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய யோகா நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

யோகா செய்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முழு நாடும், உலகமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதாக தோன்றுகிறது. இதுவே யோகாவின் வலிமை. யோகா அனைவரையும் இணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதற்கும் மற்றும் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, யோகா தினத்தில், வங்காள மக்கள் மேற்கொண்ட தூய்மை பணிக்காக அவர்களை நான் குறிப்பாக பாராட்ட விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான முன்னெடுப்பு.

இந்தியாவில், இமயமலை முதல் இந்திய பெருங்கடல் வரையிலும், கிழக்கே வடகிழக்கு மற்றும் வங்காளம் முதல் மேற்கே சவுராஷ்டிரா வரையிலும், நாடு முழுவதும் யோகாவின் ஆற்றலால் நிறைந்திருப்பதாகத் தோன்றுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.