இந்தியா

வயது 116... படிகள் 3,550... அசைக்க முடியாத பக்தியால் வி.ஐ.பி தரிசனம் பெற்ற மூதாட்டி

116 வயதிலும் மூதாட்டி படிகள் ஏறி திருப்பதிக்குசென்ற வீடியோ சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 116 வயது மூதாட்டி நவநீம்மாள், அலிபிரி மலைப்பாதை வழியாக 3,550 படிகளை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவரது அசைக்க முடியாத பக்தியைக் கண்டு வியந்த திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பி.ஆர்.நாயுடு, அந்த மூதாட்டிக்கு வி.ஐ.பி பிரேக் தரிசன ஏற்பாடு செய்து கவுரவித்துள்ளார்.

உறுதியோடு படியேறிய மூதாட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவநீம்மாள் (வயது 116) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது குடும்பத்தினரிடம் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக படிகள் ஏறி சென்று தான் ஏழுமலையானை தரிசிப்பேன் என்று உறுதியாக கூறினார்.

இதையடுத்து அவருடன் குடும்பத்தினரும் படிகள் வழியாக ஏறிச் சென்றார். 116 வயதிலும் மூதாட்டி படிகள் ஏறி திருப்பதிக்குசென்ற வீடியோ சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 116 வயதில் சாமி தரிசனத்திற்காக திருமலைக்கு 3,550 படிகள் ஏறி வந்தடைந்த அந்த மூதாட்டியின் அசைக்க முடியாத பக்தி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

அந்த பக்தைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏழுமலையானின் சிறப்பு தரிசனம் வழங்க நான் முடிவு செய்தேன். அவரைப் பற்றிய ஏதேனும் விவரங்கள் தெரிந்தால், திருமலையில் உள்ள எனது முகாம் அலுவலகத்தில் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும். மேலும் ஏழுமலையானின் ஆசீர்வாதங்கள் எப்போதும் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் இருக்க வேண்டும் என்று நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

விஐபி பிரேக் தரிசனம்

இதனை தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் நவநீதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடித்தனர். நவநீதம்மாள் குடும்பத்தினரை இன்று காலை பயோமெட்ரிக் மையத்திலிருந்து நேரடியாக அழைத்துச் சென்று வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் கோவிலுக்குள் அனுமதித்தனர்.

மூதாட்டி ஏழுமலையானை மனமுருக வழிபட்டார். மேலும் ரங்கநாயகி மண்டபத்தில் வைத்து மூதாட்டிக்கு பட்டு சால்வை அணிவித்து பிரசாதங்களை வழங்கினர்.

SCROLL FOR NEXT