டெல்லியில் மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிந்து விழுந்து அதில் மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
டெல்லியில் சத்ய நிகேதன் பகுதியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர் தங்கியிருந்த தனியார் விடுதி கட்டிடம் கடந்த ஞாயிறன்று இடிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லபட்டனர்.
இந்த சம்பவம் தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஏற்கனவே டெல்லியில் நிகழ்ந்த பல்வேறு கட்டிட விபத்து சம்பவங்கள் கவனம் பெற்று வருகின்றன.
இந்த விபத்து வெறும் தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல் தலைநகர் டெல்லி முழுவதிலும் உள்ள கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இந்த விடுதி கட்டிட விபத்து சமபவத்தில் டெல்லி மாநகராட்சி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெறும் 165 அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த 5 மாடிக் கட்டிடத்திற்கு மாநகராட்சியின் அனுமதி பெற்ற வரைபடம் எதுவும் இல்லை.
மேலும், கட்டிடத்தின் அடித்தளத்தில்உரிய அனுமதியின்றி புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததும், அனுமதிக்கப்பட்ட அவளை 5வது தளம் கட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.
விதிகளின்படி 9 மீட்டருக்கு மேல் உயரமும், 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் தங்கும் விடுதிகளுக்கு தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம். ஆனால், இந்த விடுதிக்கு எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை.
விபத்தைத் தொடர்ந்து கட்டிடத்தின் உரிமையாளர் ஹரிராம் குப்தா, அவருடைய மனைவி ஊர்மிளா மற்றும் மகன் மகேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, சட்டவிரோத கட்டுமானத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக டெல்லி மாநகராட்சியின்5 அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே தான் டெல்லி தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் டெல்லியில் கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் 2022ஆம் ஆண்டில் 349 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகியுன. இதில் 43 பேர் உயிரிழந்தனர்.
2023இல் 371 கட்டிட சரிவு சம்பவங்களில் 23 பேரும், 2024 இல் 413 கட்டிட சரிவு சம்பவங்களில் 32 பேரும் பலியாகினர்.
ஒட்டுமொத்தமாக 2022 முதல் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,133 கட்டிடச் சரிவு சம்பவங்கள் பதிவாகி, மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் (ஜனவரி முதல் ஜூலை வரை) 233 கட்டிடச் சரிவு அழைப்புகள் பெறப்பட்டு, அதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்; 101 பேர் காயமடைந்துள்ளனர்.
சத்ய நிகேதன் பகுதி, தொடக்கத்தில் குறைந்த குடியிருப்புகளை கொண்ட பகுதியாகவே இருந்துள்ளது. ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் இங்கு அமைந்துள்ளதால் சிக்கல் எழுந்தது.
பல்கலைக்கழக விடுதிகளில் போதிய இடமில்லாமல், மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள் அனைத்தும் அனுமதி இன்றி பல மாடி தனியார் விடுதிகளாகவும் உணவகங்களாகவும் மாற்றப்பட்டன.
ஒரு சதுர கிலோமீட்டருக்கு 11,320 பேர் வாழும் அடர்த்தியான டெல்லியில், இது போன்ற கட்டுப்பாடற்ற மற்றும் சட்டவிரோதக் கட்டிட மாற்றங்களே தொடர் விபத்துக்களுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.