

தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள இந்த 5 அடுக்குக் கட்டிடம், மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்தது.
டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் செயல்பட்டு வந்த 5 அடுக்குகள் கொண்ட மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விபத்து நடந்ததைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா சம்பவ இடத்திலிருந்து தலைமறைவானார். இதையடுத்து, டெல்லி காவல்துறை அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லுக்-அவுட் சுற்றறிக்கை செய்ததுடன், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் கைப்பற்றித் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. சுமார் 10 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையின் முடிவில், ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு அருகில் பதுங்கியிருந்த ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அமைந்துள்ள இந்த 5 அடுக்குக் கட்டிடம், மாணவர்களுக்கான தனியார் விடுதியாகச் செயல்பட்டு வந்தது. பழமையான இந்தக் கட்டிடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக முழு கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இடிபாடுகளிலிருந்து 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூர விபத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தின் பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அலட்சியப் போக்கு தொடர்பாக டெல்லி மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய தென் மண்டலத் துணை ஆணையர், நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பல மாநகராட்சி அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள உரிமையாளர் ஹரிராம் குப்தாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.