டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்ததில் 6 பேர் பலி: இடிபாடுகளில் சிக்கிய 9 பேர் உயிருடன் மீட்பு - மாணவர்கள் போராட்டம்!

டெல்லி விடுதி விபத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் தீவிர போராட்டம்.
University Student Protest
Published on
Summary

டெல்லி தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சத்ய நிகேதன் மண்டலத்தில், மாணவர்கள் தங்கியிருந்த ‘ஹாஸ்டல் டேஸ்’ என்ற 5 மாடி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இக்கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமான பணி

டெல்லி பல்கலைக்கழக தெற்கு வளாகத்தின் அருகே அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் மண் தோண்டும் பணிகளும், கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

மேல்பகுதியை வலுப்படுத்திய போதிலும், கீழிருந்த தூண்கள் பலவீனமாக இருந்ததே கட்டிடம் இடிந்து விழக் காரணம் என அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர். சுமார்

40 முதல் 50 ஆண்டுகள் மட்டுமே பழமையான இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆபத்தான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டது. விடுமுறை நாள் என்பதால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது அறைகளிலேயே தங்கியிருந்தனர்.

9 பேர் மீட்பு

கட்டிடம் இடிந்து விழுந்த அதிர்ச்சியில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிலர், தங்களது தொலைபேசி மூலம் உறவினர்கள் மற்றும் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டு உதவி கோரியது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 9 பேர் மீட்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இடிந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடமும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டதால், டெல்லி முதல்-அமைச்சர் ரேகா குப்தாவின் உத்தரவின் பேரில் அங்கு தங்கியிருந்த அனைவரும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

மாணவர்கள் போராட்டம்

மேலும் விபத்தில் தொடர்புடைய விடுதியின் உரிமையாளரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தனியார் விடுதிகளில் போதிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்றும், வணிக நோக்கத்திற்காக குறைந்த வசதிகளுடன் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாகவும் கூறி மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய தேசிய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினரும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் தீவிரப் போராட்ட ங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும், கட்டிட உரிமையாளர் மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் டெல்லி முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் உடனடியாக பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com