இந்தியா

வெளிநாடு வாழ் இந்தியர்களின் 100 பில்லியன் டாலர் முதலீடு: வரலாற்று உச்சத்தை தொட்டது இந்திய ரிசர்வ் வங்கி!

எஃப்.சி.என்.ஆர்(பி) திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது டாலர் சேமிப்புகளை இந்திய வங்கிகளில் வட்டி இழப்பின்றி டெபாசிட் செய்ய வழிவகை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கவரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய 'எஃப்.சி.என்.ஆர்(பி)' வைப்புநிதித் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடுகள் குவிந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இத்திட்டத்தை ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த வெளிநாட்டுச் செலாவணி அல்லாத வங்கி வைப்புத் திட்டம் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு செப்டம்பர் 30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் 80 பில்லியன் டாலர் வரை மட்டுமே முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31 அன்றே 100 பில்லியன் டாலரைத் தாண்டி சாதனை படைத்தது. அதிகப்படியான நிதியோட்டத்தைக் கையாளவும், எதிர்காலப் பொருளாதார சமநிலையைப் பேணவும் ஆகஸ்ட் 31 தேதியே ரிசர்வ் வங்கி நிறைவு செய்துள்ளது.

வரலாறு காணாத கையிருப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், இந்த 100 பில்லியன் டாலர் நிதியோட்டம் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் பலமாக உருவெடுத்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 729.3 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற எக்காலத்தும் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியுள்ளது.

எஃப்.சி.என்.ஆர்(பி) திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது டாலர் சேமிப்புகளை இந்திய வங்கிகளில் வட்டி இழப்பின்றி டெபாசிட் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த பிரம்மாண்ட டாலர் வரத்து இந்திய ரிசர்வ் வங்கிக்குச் அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தவும், நாட்டின் கணக்கு பற்றாக்குறையைச் சீர்செய்யவும் மிகப்பெரிய பலத்தை வழங்கியுள்ளது.