ரூ.20,000 கோடி கிரிப்டோகரன்சி மோசடி: துபாயில் தலைமறைவாக உள்ள சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் கடந்த 2025-ஆம் ஆண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
cryptocurrency scam
Published on

இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ரூ.20,000 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் முதன்மை குற்றவாளியான சுபாஷ் சர்மாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு, சிபிஐ மற்றும் இமாச்சல பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.5 லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி துபாயில் தஞ்சம்

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சுபாஷ் சர்மா, 'கோர்வியோ காயின்' உள்ளிட்ட போலி டிஜிட்டல் நாணயங்கள் மற்றும் பொன்சி திட்டங்கள் மூலம் சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டார். 2023-ஆம் ஆண்டு இந்த மோசடி தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை அறிந்த முதன்மை குற்றவாளி சுபாஷ் சர்மா, உடனடியாக இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பாதுகாப்பாகத் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

சொத்துகள் பறிமுதல்

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்டிவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்

*வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சுபாஷ் சர்மாவை உடனடியாகக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ மற்றும் மாநில அரசு இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*குற்றவாளி சுபாஷ் சர்மா மற்றும் அவருடைய உறவினர்களின் பெயர்களில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் அனைத்தையும் உடனடியாகப் பறிமுதல் செய்து முடக்க வேண்டும்.

*இந்த பிரம்மாண்ட நிதி மோசடி வழக்கை விரைவாகவும் பிரத்யேகமாகவும் விசாரித்து முடிக்க இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்.

இந்த கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் கடந்த 2025-ஆம் ஆண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரின் ஜாமீன் மனுவை விசாரித்த போதே, தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சுபாஷ் சர்மாவை நாடு கடத்த உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com