கோப்புப்படம் 
செய்திகள்

மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 5 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா பரவல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 5 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மைசூரு:

கர்நாடக மாநிலம் மைசூருவில் விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் எளிமையாக நடத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி அக்டோபர் 17-ந்தேதி தொடங்கி அக்டோபர் 26-ந்தேதி வரை 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கியமான மதசடங்குகளும், அரண்மனை பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடத்த முடிவாகி உள்ளது. அதுபோல் அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்திலேயே எளிமையாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அர்ஜூனா யானை சுமந்து செல்வது வழக்கம். அந்த தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் குடிக்கொண்டிருப்பார். தற்போது அந்த யானைக்கு வயதாகிவிட்டதால் அம்பாரியை சுமக்க மாற்று யானை தேர்வு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தசரா விழாவையொட்டி நடைபெறும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் 5 யானைகள் மட்டுமே பங்கேற்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதில் கோபி, விஜயா, விக்ரம், காவேரி, அபிமன்யு உள்ளிட்ட 5 யானைகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அதிகாரிகள் இறுதி செய்து அரசு அனுமதிக்கு அனுப்பிவைத்துள்ளனர். அரசு அனுமதி கிடைத்தும் 5 யானைகளும் சம்பிரதாய முறைப்படி மைசூரு அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே வேளையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தசரா விழாவில் பங்கேற்கும் 5 யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்து இருப்பதாக தசரா யானைகளை பராமரிக்கும் டாக்டர் நாகராஜ், மைசூரு வனத்துறை அதிகாரி அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதுபோல் அந்த யானைகளின் பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு இந்த மாதம் இறுதிக்குள் தசரா யானைகள் மைசூருவுக்கு அழைத்துவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.