கரூர் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கரூரில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு ரூ.245 கோடி ஒதுக்கீடு செய்தார். தற்போது திட்ட மதிப்பீடு ரூ.269.59 கோடியாக உயர்ந்துள்ளதால் அதற்கான நிதியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கியுள்ளார்.
850 படுக்கை வசதி மற்றும் நவீன வசதிகளுடன் ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் பணிகள் முடிவடைந்துவிடும். இந்த ஆண்டு முதலே 150 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அதற்கான அனுமதியை அகில இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கியுள்ளது.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நேரில் வந்து திறப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரம் கேட்டுள்ளோம். அவர் நேரம் ஒதுக்கியதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்படும்.
மேலும் அவர் அரவக்குறிச்சி தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அவர் அ.ம.மு.க.வில் இருந்து அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் நான் ராஜினாமா செய்திருப்பேன்.
மேலும் அவர் தினகரனை முதல்வராக்கி காட்டுவேன். இல்லையென்றால் தூக்கில் தொங்குவேன் என்றார். அவர் எப்போது தூக்கில் தொங்கப்போகிறார் என்று கேட்டுச்சொல்லுங்கள். நான் ராஜினாமா செய்கிறேன். அ.ம.மு.க.வில் இருந்து ஒரு சிலரே தி.மு.க.வுக்கு சென்றுள்ளனர். மற்றவர்கள் தாய் கழகமான அ.தி.மு.க.வுக்கே திரும்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.