உடுமலை:
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குடிமங்கலம் மற்றும் உடுமலை ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவீரம்பட்டி ஊராட்சி, பெரியகோட்டை ஊராட்சி மற்றும் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூளவாடி ஊராட்சி, குடிமங்கலம் ஊராட்சி மற்றும் கோட்டமங்கலம் ஊராட்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை ரீதியாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கண்ட ஊராட்சிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளித்திடவும், திட்டப்பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து , பூளவாடி அரசு மேல் நிலைப்பள்ளி யினையும், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், பொள்ளாச்சி எம்.பி., சி.மகேந்திரன், உடுமலை அசோகன், உடுமலை மற்றும் குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.