செய்திகள்

மரபணு மாற்ற கடுகு வணிகம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய மரபணு பொறியியல் மதிப்பிடல் குழு (ஜிஇஏசி) மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து தரமதிப்பீடு செய்யும். இந்தக் குழு கடந்த சில தினங்களுக்கு முன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியது. எனவே, இதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்தலாம் என தெரிகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மரபணு மாற்ற கடுகு விதைகளை வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கும் முடிவினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், ‘மரபணு மாற்ற கடுகு விதைகளை வணிக நோக்கங்களுக்கு பயன்படுத்த ஜிஇஏசி ஒப்புதல் அளித்தது துரதிர்ஷ்டவசமானது. சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் அளித்திருப்பதால் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் நாட்டில் பயிரிடப்படும். இது மிகவும் தீவிரமான பிரச்சனையாகும். மரபணு மாற்ற விதைகள் விவசாயிகள் மற்றும் வேளாண் துறையை மோசமாக பாதிக்கும் என்பதால் ஜிஇஏசி-யின் முடிவினை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது’ என வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவரும் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மரபணு மாற்ற கடுகு வணிகமயமாக்கலுக்கு எதிரான இந்த தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.