தடுப்பூசி 
செய்திகள்

இந்தியாவில் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கேட்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசியானது, மூன்றாம் கட்ட பரிசோதனையில் கடுமையான நோயை தடுப்பதில் 85 சதவீதம் செயல்திறனை காட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தடுப்பூசி ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகும். இந்த மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதலில் அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பயாலாஜிக்கல்-இ லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது.

‘பயாலாஜிக்கல்-இ நிறுவனம் எங்களது உலகளாவிய விநியோகச் சங்கிலி வலையமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். மேலும், அரசாங்கங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கோவாக்ஸ் வசதி போன்ற அமைப்புகளுடன், விரிவான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மூலம் தடுப்பூசியை வழங்க இந்த நிறுவனம் உதவுகிறது’ என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒற்றை டோஸ் தடுப்பூசியானது, மூன்றாம் கட்ட பரிசோதனையில் கடுமையான நோயை தடுப்பதில் 85 சதவீதம் செயல்திறனை காட்டியதாகவும், தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்குப் பிறகு சிறந்த பாதுகாப்பை அளிப்பதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி கிடைப்பதை துரிதப்படுத்தவும், கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை எதிர்நோக்கியிருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒற்றை டோஸ் தடுப்பூசியை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதை தடுக்க முடியும் - நிபுணர்கள் தகவல்