கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பெருமாள்கோவில் குளம், கழுதைமேடு, தம்மணம்பட்டி, குருவனூத்து பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பந்தல்கள் அமைத்து கோவக்காய், பாகற்காய், புடலங்காய் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.
50 முதல் 60 நாளில் விளைச்சல் எடுக்ககூடிய புடலங்காய் கம்பம், சின்னமனூர் வார சந்தைக்கும் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் கேரள வியாபாரிகள் ஏராளமானோர் இதனை வாங்கி செல்கின்றனர்.
ஒரு கிலோ புடலங்காய் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். புடலங்காய் விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக பல விவசாயிகள் திராட்சை கொடிகளில் இதனை பயிரிட்டு வருகின்றனர். இதேபோல் பாகற்காய் மற்றும் கோவக்காய்க்கும் நல்ல விலை கிடைப்பதால் அதனை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.