குடகு மாவட்டம் பாகமண்டலா காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி. 
செய்திகள்

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை

கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை தொடரும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. ஆனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்தள்ளது. இதில் காவிரி நதி உருவாகும் குடகு மாவட்டத்தில் உள்ள தலக்காவிரி, பாகமண்டலா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.


கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

இதனால் மாண்டியா மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் கூடுதலாக தண்ணீர் வருகிறது.

கடந்த வாரத்தில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 1500 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் வறண்டு கிடந்த கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர தொடங்கி உள்ளது.

மொத்தம் 124.8 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையில் நேற்றைய நிலவரப்படி 68.60 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இனி வரும் நாட்களில் நீர் மட்டம் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.

இதே போல கேரளாவில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது.

காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு முக்கிய அணைகளுக்கும் கணிசமான அளவில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கர்நாடக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் போது தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடையும்.

இந்த மழை தொடரும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கும் இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் தற்போது 800 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் நேராக ஒகேனக்கல் வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. காவிரி ஆற்றிலும் தண்ணீர் ஓடுகிறது.